வல்லினம் இளம் எழுத்தாளர் விருது: மலாயா பல்கலைக்கழக மாணவி அபிராமி பெறுகிறார்!

படம்: அபிராமி கணேசன்- ‘வல்லினம் இளம் எழுத்தாளர் விருது’ பெறுனர்

மலேசியாவில் தீவிர இலக்கியப் படைப்புகளை நேர்படப் படைக்கும் இலக்கியக் குழுவான வல்லினம் ஏற்பாடு செய்துள்ள “வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது”, இவ்வாண்டு எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வழங்கப்படுவதாக அண்மையில் அதன் வலைத்தளத்தில் தெரிவித்திருந்தது.

கெடா மாநிலத்தில், குரூண் எனும் சிற்றூரில் பிறந்த அபிராமி கணேசன் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியத் துறை மாணவியாவார். மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பொதிகை’ இதழில் தனது எழுத்து முயற்சியைத் தொடங்கிய இவர், பின்னர் வல்லினம் இதழில் கட்டுரைகள் எழுதத் தொடங்கி உள்ளார். வல்லினம் வாயிலாக தனக்கான ஓர் அடையாளத்தைப் பெற்றுள்ளார்.

தமிழர் வரலாற்றுத் தடயங்களை மீட்டுணரும் பொருட்டு தென்கொரிய நாட்டைச் சேர்ந்த செம்பவள இளவரசியின் வாழ்வைச் சொல்லும் கதையை வரலாற்று செய்திகளுடன் சேர்த்து கட்டுரையாக்கியத் தருணம், வல்லினம் குழுவினரின் கவனத்தை ஈர்த்ததாக அபிராமி ஒரு நேர்காணலில் வழி கூறினார். அதன்வழியே வல்லினத்தில் படைப்புகளை எழுத வாய்ப்பு கிட்டியதாகவும், இதுவரையிலும் ஏழு படைப்புகள் வல்லினத்தில் வெளிவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அபிராமியுடனான முழு நேர்காணல் கீழே:

கேள்வி: பொதுவாக தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால், எழுதிப் பழகுவது ஒரு சிலரின் வழக்கம். அதுவே அது அங்கீகரிக்கப்படும்போது, அவர்களின் வேட்கை பெருக்கெடுக்கும், அதிகமாக எழுதத் தொடங்குவார்கள். ஆயின், எல்லா எழுத்துக்களும் படிப்பதற்கு ஏதுவானதா என்பதே கேள்வி. உங்கள் தேர்வு எவ்வாறு இருக்கும்? ஏன்?

பல்கலைக்கழக வாழ்க்கைக்குள் நுழைந்த காலத்திலேயே என்னுடைய கல்வி கற்கும் சூழலையும் பொருண்மையையும் கடந்து சிலவற்றைப் படிக்க வேண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் எதைப் படிப்பது, எந்த தளத்தில் எழுதுவது என்பது தொடக்கம் முதலே எனக்குக் குழப்பத்தைத் தந்தது.

முதலில் எதை படிக்க வேண்டும் என்ற புரிதல் இருந்தால்தான் எதை எழுத வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும் என நினைக்கிறேன். வகுப்பில் விரிவுரையாளர்கள் பரிந்துரை செய்யும் புத்தகங்கள், எழுத்தாளர்களைத் தேடிப் படித்தேன். பெரும்பாலும் அவை பாடங்களுடன் தொடர்புடைய சமயம் அல்லது இலக்கியம் சார்ந்ததாகவே இருக்கும். அடுத்து, இடுபணிகளுக்காக கூடுதல் தகவல்களைச் சேகரிப்பது, செறிவாக எழுதப்பழகுவது என செய்து வந்தேன்.

தமிழ் மொழியைக் கடந்து எனக்கு தொழில்நுட்பம், அறிவியல், வரலாறு ஆகியவை மேல் ஆர்வம் இருந்ததால் அவற்றின் மீது தேடல் மிகுந்திருந்தது. படிப்பதற்கு ஏதுவானது, அல்லாதது என்ற வேறுபாட்டை அடையாளம் காண்பதற்கு எனக்கு ஒரு வழிக்காட்டி தேவைப்பட்டது. நான் “ஸுனார்: அங்கதத்தைக் கலையாக்கிய ஆளுமை” என்ற தலைப்பில் முதல் கட்டுரை எழுத தொடங்கியதிலிருந்து கடைசியாக “மலேசியாவில் செம்பனை” என்ற கட்டுரைவரை எனக்கு அந்த வழிகாட்டல் தொடர்ந்து கிடைத்தது. இப்பொழுது எதைப் படிக்க வேண்டும் என்று ஓரளவு தெளிவு கிடைத்துள்ளது.

ஆனால், எது குறித்து எழுத வேண்டும் என்பதை அடையாளம் காண நெடிய வாசிப்பும் அனுபவமும் இன்னமும் எனக்குத் தேவை என்று நினைக்கின்றேன். தொடர் வாசிப்பில் உள்ளவர்களுக்கே எவையெல்லாம் தமிழ் சூழலில் முக்கியமாக பேசப்பட வேண்டும் என்பதான பார்வை இருக்கும். அந்த செயல்முறையில் நான் இப்பொழுது கற்றுக் கொள்கின்ற படிநிலையில் உள்ளேன்.

அதனால், ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் முன் நல்ல வழிகாட்டிகளிடம் கலந்தாலோசிப்பது உண்டு. இதில் எழுத்தாளர் விஜயலட்சுமி மற்றும் எழுத்தாளர் ம.நவீன் இருவரும் எனது ஆதர்சனங்கள். பரிந்துரை செய்யப்படும் தலைப்புகளில் விரிவான வாசிப்பைச் செய்து எழுதத் தொடங்குவேன். சுயமாக நான் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளிலும் அவர்கள் வழிகாட்டுவதுண்டு. இதில் மாறுபட்ட கருத்துகள் தொடர்பாக உரையாடுவதும் விவாதிப்பதும்கூட நிகழ்வதுண்டு.

இதுவரை நான் எழுதியுள்ள கட்டுரைகளுக்குக் கிடைத்த பாராட்டுகளில் பெரும்பாலானவைத் தமிழ் சூழலில் பெரிதாக அறிமுகம் இல்லாத விடயத்தை அக்கட்டுரைகள் பேசியுள்ளதால்தான். நான் எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் தனித்தன்மை வாய்ந்ததாகப் பார்க்கப்படுவதற்கு இது முக்கிய காரணமாகும்.

கேள்வி: ஆய்வுத்துறை என்பது சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடிய பக்கம் அல்ல. அதற்கான உழைப்புக்கு, நீங்கள் கொடுத்த விலை என்ன? எம்மாதிரியான ஆய்வுகளை இதுவரையிலும் மேற்கொண்டுள்ளீர்கள். எழுத்து துறையில் உங்கள்
நோக்கம் எதுவாக இருந்தது?

பல்கலைக்கழக ஆய்வு மாணவியாக ஆய்வு முறைமைகளை ஓரளவு அறிவேன். கூடுதலாக, மலாயாப் பல்கலைக்கழகத்தில் “Information Literacy” கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் ஆய்வு மேற்கொள்ள விருப்பவர்களுக்கான அடிப்படைகள். இவ்விரண்டையும் ஓரளவு கைவரப்பெற்றதால் ஆய்வு மேற்கொள்வது எனக்கு சிரமமாக இருந்ததில்லை. எனினும், இயல்பாகவே ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதுவதற்கு நான் அதிகமான கால அவகாசம் எடுத்துக் கொள்கிறேன். காரணம், ஒரு தலைப்பு குறித்து எழுதுவதற்கு முன் எனக்கு அதை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

அதன் மூலமே செறிவான படைப்பை வாசிப்பவர்களுக்குக் கொடுக்க முடியும். ஒருவேளை எனக்கு முன்பே தெரிந்த விடயம் குறித்து எழுதுவதாக இருந்தாலும்கூட கட்டுரை எழுதத் தொடங்குவதற்கு முன் அத்தலைப்பை ஒட்டி ஆரம்பகால வரலாறு தொட்டு சமகால நிலைவரை புத்தகம், இணையம், ஆய்வறிக்கை, வலைஒளி போன்ற தளத்தில் படித்து அதனூடே தரவுகளையும் சான்றுகளையும் சேகரித்து வைத்துக் கொள்வேன். பின்னர் கட்டுரை எழுத தொடங்குவேன்.

ஆய்வுத்துறைக்கு அதிகமான தேடல், உழைப்பு, நிதானம், சமரசமின்மை தேவைப்படுகிறது. ஒரு கட்டுரையை முழுக்கவே ஆய்வுப்பூர்வமான கட்டுரையாக மட்டுமில்லாமல் இயல்பாக வாசிக்க கூடிய மொழி நடையில் எழுதுவதற்கு தொடக்கத்தில் சிரமமிருந்தது. ஆனால், படைப்பை அனுப்பி வைத்த பின் விஜயலட்சுமி, ம. நவீன், அ. பாண்டியன் என துறை சார்ந்தும் ஆளுமை சார்ந்தும் கட்டம்கட்டமாக பலரும் பலமுறை செறிவாக்கம் செய்யும்போது மாற்றங்களை செய்யச்சொல்லி பணிக்கும்போது சளிப்படையாமல் செய்வேன்.

கூடுமானவரை செறிவாக்கம் செய்பவரின் அருகிலிருந்து எவ்வாறு செறிவாக்கம் செய்யப்படுகிறதென பார்ப்பேன். அவசியமில்லை என்று நிராகரிக்கும், வெட்டி வீசும் ஒவ்வொன்றையும் முழுமனதுடன் ஏற்பேன். தேவையிருப்பின் விவாதிப்பேன். ஒரு படைப்பின் தேவை என்ன என்பதை புரிந்துகொள்ளும், முடிவு செய்யும், ஏற்கும் பக்குவம் ஒரு எழுத்தாளனுக்கு அவசியம். அவ்வாறு செறிவாக்கம் செய்த படைப்பின் இறுதி வடிவத்தைப் படிக்கும்போதே அதனை ஒரு முழுமையான கட்டுரையாக உணர்வேன்.

ஒரு கட்டுரையை எழுத கொடுக்கும் உழைப்பை செறிவாக்கம், பிழைத்திருத்தம், தகவல்களை மறு உறுதி செய்தல் போன்ற வேலைகளுக்கும் கொடுப்பேன். இதனால் அடுத்தடுத்து நிறைய எழுத முடியாமல் போகலாம். நிறைய எழுதி பயனென்ன. ஒரு படைப்பானாலும் அது தரத்துடன் வருவது அவசியம். அதுவே பயன்மதிப்பைக் கொண்டிருக்கும். காலம் கடந்தும் நிலைத்திருக்கும்.

இம்முழுமைத்துவத்தைப் பெற இளவயது எழுத்தாளராக நான் கொடுக்கும் விலை மிகப்பெரியது. மற்றவர்களைப் போல் எனக்கு உடனடி வெளிச்சம் எதுவும் கிடைக்காது. அடுத்தடுத்து என் பெயரை பிரபலங்கள் உச்சரிக்க வாய்ப்பமையாது. பதவிகளோ அங்கிகாரங்களோ இருக்காது. என் பெயரின் முன் அடைமொழிகள் அலங்கரிக்காது. ஆனால், இவையெதுவும் இல்லாமல் ஒருவரால் செயலூக்கம் பெற முடியுமென்றால் அதை நோக்கியே எனது பயணத்தையும் வடித்துக்கொள்ள
நினைக்கிறேன்.

ஸுனார் தொடங்கி நான் ஆய்வு செய்த ஆளுமைகள் ஒவ்வொருவரிடமும் நான் அவதானித்த விடயம் இதுதான். இதுவரை நான் வல்லினத்தில் எழுதிய கட்டுரைகளில் பெரும்பாலும் சூழலியல் மற்றும் மலேசியா தொடர்புடையவை. மேலும், அடுத்து எழுதவிருக்கும் கட்டுரைகளும் முன் எழுதிய கட்டுரைகளின் நீட்சியாக அல்லது அதை சார்ந்து வெவ்வேறு கருபொருளைக் கொண்டதாக எழுத திட்டமிட்டுள்ளேன். எழுத்து துறையில் என்னுடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது மிக முக்கியமான ஒன்று என கருதுவதால் இந்தக் குறுகிய கால அனுபவத்திலேயே உடனடியாக இதுதான் என்று குறிப்பிட்ட ஒன்றை நான் முடிவு செய்ய விரும்பவில்லை.

நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதிகமான வாசிப்பு, பயிற்சி, தேடலுக்குப் பின் எழுத்துத் துறையில் என்னுடைய நோக்கம் என்ன என்பதை நான் அடையாளம் கண்டுக் கொள்வேன் என்று நம்புகிறேன். தற்சமயம் என்னுடைய தேர்வு முழுக்கவே ஆய்வுத்துறை சார்ந்தது. இந்த ஒரு துறையில் முழுமையாக என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவாக்கொள்கிறேன்.

இன்று (அக்டோபர் 12) நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டதால் நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேள்வி : வல்லினம் இலக்கியக் குழுவுடன் இணைந்து பயணித்ததன் காரணம்?

மலேசியத் தமிழ் எழுத்துலக சூழலில் ஒருவர் என்ன எழுதியிருந்தாலும் மாற்றுக்கருத்தே இல்லாமல் அதை அப்படியே ஏற்பதும் விமர்சனமற்று பாராட்டுவதும் வழக்கம். சமூக வலைத்தளங்களில் இவை இன்னும் பூதாகரமாக விமரிசையாக மேற்கொள்ளப்படுகின்றன. புதியவர்களை விமர்சனங்களால் புண்படுத்தாமல் ஊக்கப்படுத்துவதாக சொல்வது ஒருபுறம் என்றால் இந்நாட்டில் எழுத வருபவர்களே குறைவு என்பதால் எல்லாரையும் அரவணைத்து மொழி, இலக்கியம் வளர்ப்பதாக தொடர்ந்து பம்மாத்துகள் செய்யப்படுகின்றன.

இன்னொரு பக்கம் உரக்கப் பேசுவது, ஆளுமைகளுடன் படம் பிடித்து போட்டு தன்னை எப்போதும் பரபரப்பாக காட்டிக் கொள்வது எனச் செய்பவர்கள் தங்களது ஆற்றலுக்கு மீறிய வெளிச்சத்தில் மிளிர்கிறார்கள். இதுதான் இதுவரையிலும் இந்நாட்டின் எழுத்துறையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

அதில், என்னைப் போன்ற உழைப்பையும் ஆய்வு நேர்மையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு எழுத வருபவர்கள் பல சமயம் இப்பெருவோட்டத்தில் காணாமல் போய்விடுகிறார்கள். அவ்வகையில் வல்லினம் இலக்கிய குழு எழுத்தி, வாசிப்பு உழைப்பையும் அதில் ஒருவர் கொண்டிருக்கும் நேர்மையையும் முதன்மைப்படுத்துகிறது. அதிலும் முக்கியமாக படைப்பின் வழி மட்டுமே ஒருவரை முன்னிறுத்துகிறது. ஓர் அறிவார்ந்த தளம் இப்படியாகத்தான் செயல்பட முடியும். இங்குதான் என்னை வல்லினத்துடன் பொறுத்திக் கொள்கிறேன்.

அடுத்து, ஒரு நல்ல படைப்பு உருவாக வேண்டும் என்பதில் என்னைப் போல செறிவாக்கம் செய்பவர்களும் முழுகவனத்துடனும் அக்கறையுடனும் செயல்படுவது எனக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. எழுத்தாளர் அ.பாண்டியன் உள்ளிட்டவர்கள் அதற்காக மெனக்கெடுவது ‘நான்’ எனும் அகங்காரத்தை என்னிடமிருந்து உடைக்கச் செய்துள்ளது.

கருத்து மாற்றங்களை வரவேற்பது, விவாதங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் வாய்ப்பளிப்பது போன்ற உற்சாகமான தளமாக வல்லினம் இருப்பதும் கவனிக்கத் தக்கது. அடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் படைப்பைக் கொடுக்க வேண்டும் என்று வல்லினம் குழுவினர் கால வரையறை மீது வைக்கும் மிதமான அழுத்தம் செயலூக்கம் குன்றியிருக்கும் தருணங்களில் என்னை எழுத நகர்த்தியுள்ளது.

இவற்றையெல்லாம் கடந்து, எதையும் பயமின்றி எழுதி பழகுவதற்கும், தவறுகளில் இருந்து திருத்திக் கொள்வதற்கும் முழு சுதந்திரம் இருப்பதாக உணர்கிறேன். தொடர்ந்து வல்லினத்தில் எழுதியதற்கும், இன்னும் எழுத வேண்டும் என்று எண்ணுவதற்கும் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளராக எனக்கு அவர்கள் கொடுக்கும் இந்த எழுத்துச் சுதந்திரமே முக்கியமானது.

கேள்வி : இது வரையிலும் என்னென்ன ஆய்வு சார்ந்த படைப்புகள் வல்லினத்தில் வெளிவந்துள்ளன?

ஸூனார் தொடர்பான (மொழிபெயர்ப்பு + ஆய்வு) கட்டுரையைத் தொடர்ந்து, “கே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல்” என்ற தலைப்பில் ஆங்கில எழுத்தாளர் கே.எஸ்.மணியம் பற்றியும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய கதைகள் குறித்தும் எழுதியிருந்தேன். பின், “புருனோ மன்சர் : காட்டில் கரைந்த காந்தியம்” நான் எழுதிய கட்டுரைகளிலேயே அதிகமான கால அவகாசம் எடுத்துக் கொண்டது. இந்த கட்டுரையில் புருனோ மன்சர் எனும் ஆர்வலரின் வரலாறு மற்றும் இயற்கைக் தொடர்பான பல விடயங்களும் பேசப்பட்டிருக்கும்.

பொதுவாக எனக்கு சூழலியல் மீது அதிக ஈடுபாடு இருந்ததால் முன் எழுதிய இரு கட்டுரைகளைக் காட்டிலும் இக்கட்டுரையை இன்னும் அதிக ஈடுபாட்டோடு எழுதியிருந்தேன்.

செறிவாக்கம் செய்யும்போது அக்கட்டுரை மிக நீண்டதாக இருந்ததால் தேவை கருதி அதில் சில பகுதிகள் நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட பகுதியில் மேலும் சில தகவல்களைச் சேர்த்து “வனத்தின் குரல்” என்ற தலைப்பில் அடுத்தக் கட்டுரையை எழுதினேன். அதன் நீட்சியாக, தட்பவெப்ப நிலை குறித்து உலக அளவில் குரல் எழுப்பி வரும் கிரேட்டா துன்பெர் என்ற சிறுமியைப் பற்றி “குறைந்தபட்சம் பதற்றமாவது கொள்ளுங்கள் – கிரெட்டா” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன்.

பிறகு, “மலேசியாவில் செம்பனை பயிரிடலும் அதன் விளைவுகளும்” என்ற தலைப்பில் செம்பனையின் வரலாறு மலேசியாவில் அதன் வளர்ச்சி, நிலை குறித்து கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும். இறுதியாக, “மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்” என்ற நீண்ட கட்டுரை இரு பாகங்களாக வெளிவந்தது. இக்கட்டுரையை எழுதி முடிப்பதற்கே எனக்கு அதிக உழைப்பு தேவைப்பட்டது. இக்கட்டுரைகளுக்கான தரவுகளைச் சேகரிக்க மட்டுமே பல மாதங்கள் ஆனது.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை உருவான வரலாற்றை ஓரளவு முழுமையாக இக்கட்டுரையின்வழி தெரிந்துக் கொள்ள இயலும். நான் இந்திய ஆய்வியல் துறை மாணவி என்பதால் மிகுந்த ஆர்வத்துடம் எழுதிய கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

கேள்வி : “வல்லினம் இளம் எழுத்தாளர் விருது”, இதனை எவ்வாறு பார்க்கிறார்கள்? இந்த விருதுக்குப் பிறகு உங்கள் இலக்கு என்ன?

தொடக்கத்திலிருந்தே என் படைப்புகளின் மீது விவாதங்கள், விமர்சனங்கள் எழுவதைதான் நான் விரும்புகிறேன். ஓர் ஆக்கம் பொதுத்தளத்தில் வைக்கப்படும்போது அதன் குறைநிறைகளை எவ்வித சமரசமுமின்றி முன்வைப்பதுதான் அந்த படைப்புக்கும் படைப்பாளனுக்கும் செய்யும் முதல் மரியாதையாக இருக்க முடியும்.

பாராட்டுகள், விருதுகள், பட்டங்கள் அல்ல, விமர்சனமும் விவாதமும்தான் தேர்ந்த எழுத்தையும் எழுத்தாளனையும் உருவாக்கும். அவ்வகையில் என் உழைப்புக்கான அங்கிகாரத்தை ஒவ்வொரு படைப்பிலும் நான் பெற்றுள்ளதாக உணர்கிறேன். மேலும் கருத்துகளையும் விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.

அடுத்து, ‘வல்லினம் இளம் எழுத்தாளர் விருது’ எதிர்பார்க்காத ஒன்று. வல்லினம் போன்றதொரு முக்கியமான அறிவியக்க குழுவிலிருந்து இப்படியான ஒரு அங்கீகாரம் கிடைப்பது என்பது எனக்கு அதிகமான பொறுப்புணர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது.

இவ்விருது என்னைபோல் எழுத நினைக்கும் பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கின்றது. இது என்னுடைய தொடக்கத்திற்கான உந்துதலாகவே நான் ஏற்கிறேன். ‘வல்லினம் இளம் எழுத்தாளர் விருது’ என்பதை என்மீதும் என் எழுத்து சார்ந்த உழைப்பின் மீது எழுத்துலகம் வைத்திருக்கும் நம்பிக்கியாகவே கருதுகிறேன்.

தொடர்ந்து ஆய்வுத்துறையில் முழு கவனம் செலுத்தி இத்துறையில் முழுமையாக என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் நல்ல படைப்புகளை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்த்துறைச் சார்ந்து அல்லாமல் வேறு துறையில் என் பணியும், கல்வியும் அமையும் சூழ்நிலை ஏற்பட்டாலும், எழுதுவதை நிறுத்தக் கூடாது என்று எண்ணம் ஆழமாக பதிந்துள்ளது. மலேசியத் தமிழ் எழுத்துச் சூழலில் நிறைய வெற்றிடங்கள் இருப்பதை எழுத வந்த மிக விரைவிலேயே அவதானிக்க முடிந்தது. அதை நோக்கியே என் இலக்கு இருக்கும்.

முற்றும்

அபிராமி கணேசன் போன்ற இளம் எழுத்தாளர்களை வல்லினம் போன்ற இலக்கியக் குழு, அடையாளம் கண்டு வெளிக்கொணர்வது மகிழ்ச்சிக்குரியது.

வல்லினம் இவ்வருடத்துக்கான இளம் எழுத்தாளர் விருதை கட்டுரை பிரிவுக்கானதாக முடிவெடுத்துள்ளது என்று அறிவித்து, விருது தொகையாக ரொக்கம் இரண்டாயிரம் ரிங்கிட்டுடன் (RM 2000) விருது கோப்பையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

விருது நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) தைப்பிங்கில் உள்ள கிராண்ட் பாரோன் தங்கும்விடுதியில் நடக்க இருந்த சூழலில், இன்று (அக்டோபர் 12) நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டதால் வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் இளம் எழுத்தாளர்களின் பிற இலக்கிய முயற்சிகளும் விருதுக்கு பரிசீலிக்கப்படும் என்ற நம்பிக்கைக் கலந்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது. அபிராமி கணேசனுக்கு வழங்கப்பட இருக்கும் இவ்விருது, இனி வரும் இளம் படைப்பாளர்கள் பலருக்கும் ஊக்குவிப்பாக இருக்கும் என்று நம்புவோம்.

முகநூல் பின்னூட்டங்கள்

Recommended For You